கேரள மாநிலம் இடுக்கி அருகே பிறந்தவன் அரிக்கொம்பன். இவன் பெயருக்குரிய காரணமும் அரிசி தான். ஆனால், அரிசிக்கொம்பன் தொடக்கத்தில் அரிசி தீனிக்காரன் அல்ல. தாய்ப்பாசம் கொண்டவன். ஒரு வயது குட்டியாக இருந்தபோதே தனது தாயுடன் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று அரிசியை சுவைபார்த்துவிட., நாவில் அரிசி சுவை ஒட்டிக்கொண்டது.
சிறிது காலத்தில் நோயுற்று தாயும் இறந்துவிட, வேறு இரை பழகாததால் வீடுகளையும் ரேஷன் கடைகளையும் தேடி அரிசியை மூட்டை மூட்டையாக உண்டுவந்தான்.
அரிசிக்கொம்பனால் மலையாளபகுதி தமிழ் மக்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. இடுக்கி மாவட்டம் பூப்பாறை அருகே 301 காலனி மற்றும் சிங்கு கண்டம் பகுதியே காலியாகிவிட்டது. 301 காலனியில் 200 குடும்பங்கள் வெளியேறி இப்போது 101 காலனியாகிவிட்டது.
விலக்கு காலனியில் இருந்து 140 குடும்பங்கள் விலகிப்போய்விட்டன.
பந்தடிகுளத்தில் இருந்து 30 குடித்தனங்கள் வெளியூர் போக, எண்பதேக்கர் காலனியில் இருந்து 8 குடும்பங்கள் போய் எழுபத்து மூன்றேக்கர் ஆகிவிட்டது.
கடந்த 2017ல் பூப்பாறை அருகில் வனத்துறையினர் இவனை பிடிப்பதற்கு ஏழு முறை மயக்க ஊசி செலுத்தினர். அனைத்தையும் தாங்கிக்கொண்டு காட்டுக்குள் போய்விட்டான். தொடர்ந்து அங்கிருந்த சக்ககொம்பன் மற்றும் மொட்டவாலன் ஆகிய யானைகளை கோஷ்டி சேர்த்துக்கொண்டு சின்னக்கானல், சூரியநெல்லி, பூப்பாறை ஆகிய இடங்களில் தனது வழக்கமான வேலைகளில் ஈடுபட்டான்.
இறுதியாக, இவனது அட்டகாசத்துக்கு தீர்வு காண வனத்துறையினர் நீதிமன்றம் சென்றனர். கீழமை நீதிமன்றம் அவனைப் பிடிக்க தடை விதிக்க, அப்பீல் செய்து, பிடித்து வேறு இடத்தில் கொண்டு விட அனுமதி பெற்றனர்.
அவ்வாறே மலையாள அரிசிக்கொம்பனை பிடித்து வந்து தமிழ் தேசமான தேனி பகுதியில் விட்டனர். அதன்பின்னர் கம்பம் தேனி பகுதியில் தமிழ் மக்கள் பட்ட கஷ்டங்களை கடந்த ஒரு மாதமாக யாவரும் அறிவோம். அங்கிருந்து கடும் பாடுபட்டு அவனைப் பிடித்து வந்து தற்போது மணிமுத்தாறு பகுதியில் விட வந்துள்ளனர்.
மணிமுத்தாறு பகுதியில் அரிசி கொம்பனை விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ் டி பி ஐ கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களில் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதுமட்டுமின்றி, பாபநாசம் பகுதியில் காணி மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அரிசிக்கொம்பன் நடமாடும் காட்டில் தாங்கள் வசிக்க முடியாது என்று காணி மக்கள் அச்சம் தெரிவித்தனர். அவர்களிடம் டிஎஸ்பி சதீஷ்குமார் சமாதானம் பேசினார்.
இவ்வளவு களேபரத்துக்கும் நடுவே, அரிசி கொம்பனை மணிமுத்தாறு காட்டில் விடுவதில் வனத்துறையினர் கறாராக உள்ளனர்.
மலையாள தேசத்து அரிக்கொம்பனை கண்டு மணிமுத்தாறு பாபநாசம் பகுதி மக்கள் நடுங்குவதற்கும் காரணம் உள்ளது.
இவன் 2017ம் ஆண்டு வரை 7 பேரை கொன்று, 108 வீடுகள், 20 ரேஷன் கடைகளை சூறையாடிய பின்னரே மலையாளிகள் அரிசி கொம்பனுக்காக நீதிமன்றம் சென்றனர். அதன்பின்பும் இதுவரை கம்பம் பகுதியில் ஒருவர் உட்பட 20 பேரை கொன்றுள்ளான்
மூணாறு பகுதியில் 13 பஞ்சாயத்துகளில் முழு கடையடைப்பு போராட்டம், போடிமெட்டு அருகே சாலை மறியல் என கேரள மக்கள் தொடர் போராட்டம் நடத்தியதன் விளைவாகவே தமிழ் பகுதியில் கொண்டு விடப்பட்டுள்ளான்.
எங்கு விட்டாலும், ரேஷன் கடைகளையும் குடியிருப்புகளையும் தேடிச்செல்வது அரிசிக்கொம்பனின் வழக்கமாக உள்ளது.
சுற்றுச்சூழல் அறிஞர்கள் சொல்வது போல், வாழ்விட மாற்றம் ஒரு யானைக்கு அசெளகரியத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தும். அரிசி கொம்பனை பிடித்து, சில நாட்களாவது அரிசிக்கு பதிலாக இலை, தழைகளை கொடுத்து அதன் உணவு பழக்கத்தை முற்றிலும் மாற்றிய பின்பு பூர்வீகமான இடுக்கி பகுதியிலேயே கொண்டு விட்டால் அதன் குணபாவம் மாற வாய்ப்புள்ளது என்பது உண்மை.
ஆனால் எதையும் கவனத்தில் கொள்ளாமல், தமிழ் பகுதி மக்களின் போராட்டத்தையும் மதிக்காமல் நெல்லை வனப்பகுதியில் விடவுள்ள நிலையில், இனி இங்கு அரிசிக்கொம்பன் ஆட்டம் எப்படி இருக்குமோ என்று மணிமுத்தாறு பாபநாசம் பகுதி மக்கள் பதைபதைப்புடன் உள்ளனர்.