குலம் காக்கும் தெய்வங்கள் _ 2

0
1417

இவ்வாறான நமது குலச்சாமிகள் அனைவரும் தற்போது சிறு தெய்வங்கள் என சுருக்கி அழைக்கப்படுகின்றனர். ஆனாலும், இவர்களே ஊர் மக்களைக் காக்க இரவு வலம் வருவதாக இன்றும் நம்பிக்கை உண்டு. அதற்காகவே அவர்கள் குதிரையுடன் நிற்கின்றனர். சிலருடன் நாய் உடனிற்கும். சிவனுக்கு காளை, முருகனுக்கு மயிலும் இதையொத்தே.
எல்லா குல தெய்வங்களுக்கு உருவம் கிடையாது. சில இடங்களில் கீழே பருத்து, மேலே சுருங்கிய நான்கு பக்கங்கள் கொண்ட வடிவத்தில் சாமியை சமைக்கின்றனர். அதில் எந்த பீடத்தில் எந்த சாமி இருக்கிறதென்று சாமி கொண்டாடிகள் அறிந்துவைத்துள்ளனர். கொடை விழாக்களின்போது பம்பை, உறுமி, நாகஸ்வரம்,வாங்கா, சேகண்டி, வெண்சங்கு போன்றவற்றால் உச்சமாக ஒலியெழுப்பி சாமியை வரவழைக்கின்றனர்.
நாடாளும் ராசா, ராணிகள் பெருந்தெய்வங்களானார்கள். பெரும்பாலான சைவ, வைணவ கோவில்களில் சாமியை மன்னர் பெயரிட்டே அழைத்து வணங்குவது இதற்கு சான்று. அது மட்டுமின்றி, மீனாட்சி அம்மன் அரசியாக இருந்தவர். நவநாட்களின் ஒரு நாளில் மீனாட்சிக்கு பாண்டிய வம்சத்தின் அடையாளமான வேம்பு மாலை இட்டு வழிபாடு நடப்பதே இதற்கு ஆதாரம்.
முற்காலத்தில் அரசியரின் கல்லறைக்கு பள்ளிப்படை அமைத்து வழிப்படுவார்கள். வெம்மை நோய் வந்து இறந்துப்போன பள்ளிப்படைத்தாளே சமயபுரம் மாரியம்மன். மீனாட்சி அம்மன் கோயிலுக்கு (அரண்மனைக்கு?) அருகே இருக்கும் இடத்தில்தான் வீரனான மதுரை வீரன் பலியிடப்பட்டதாக கூறப்படுகிறது.
பெருந்தெய்வங்கள் ஆட்சியாளர்கள் என்றால், அவர்களின் ஆட்சி சிறப்புற நடக்கவும், மக்கள் பயமின்றி இருக்கவும் உதவிசெய்து உயிர் விட்டவர்கள் சிறு தெய்வங்களானார்கள் எனலாம். பகை முடித்து ஆட்சி நிலைக்க களம் புகுந்து உயிர் உகுத்த வீரர்களை நடுகல் நட்டு வணங்கினர்.
ஆண்கள் வீரத்துடன் விளங்கவேண்டுமென்றால், பெண்டீர் கற்புடனும் மானத்துடனும் திகழவேண்டியது அவசியமல்லவா? அவ்வாறு வாழ்ந்து மடிந்தவர்கள் பெண் தெய்வனாயினர். அதேபோல், மனிதர்கள் இயற்கை சீற்றம், பசி, கொலைக்கு ஆளாவது ஆட்சியின் சிறப்புக்கு பங்கம் என்பதால் அவ்வாறு இறந்தவர்கள் ஆன்மாவை சாந்தப்படுத்த நிலையம் அமைத்து அவர்களை பீடங்களில் ஆவாஹனம் செய்து வணங்கினர்.
ஜக்கம்மாள் என்றழைக்கப்படும் தெய்வமே நாயக்க அரச வம்சத்தினரின் குலதெய்வம். கம்பளத்து நாயக்கர்களின் துணைவியர் கணவரை இழக்க நேரிட்டால் சதியில் ஈடுபட்டு தமது உயிரை மாய்த்துள்ளனர். சதி என்பது வேறொன்றுமல்ல, கணவருடன் உடன்கட்டை ஏறுவது தான். இவ்வகையில் உயிர் நீத்தவர்கள் குலதெய்வங்களாக வழிபடப்பட்டு வந்துள்ளனர். அவர்களே தீப்பாய்ஞ்சம்மன்கள்.
சோழிய வேளாளர், கொங்கு வேளாளக் கவுண்டர்களின் குல தெய்வம் மாசி பெரியண்ணன். கொல்லிமலை உச்சியிலுள்ள மாசிக்குன்றில் இவர் வீற்றிருக்கிறார். இவர் காசியிலிருந்து வந்த சிவரூபமாக கருதப்படுகிறார். அதாவது, காசியிலிருந்து வந்த பெரியவர் ஒருவர் இங்குள்ள மக்களுக்கு நல்வழிகாட்டி இங்கே சமாதியாகி இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் துணிபு.
சுடலைமாடன், இசக்கி போன்றோர் தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, குமரியிலும், மதுரை வீரன், முனியசாமிகள் மதுரை பகுதியிலும், ஐயனார், கருப்பசாமிகள் தமிழகத்தில் பரவலாகவும் கும்பிடப்படும் குல் தெய்வங்களாவார்கள். ஐயனார்களில் முக்கியமானவராக கருதப்படும் ஐயப்பன் அரசகுலத்து மாவீரர். போரில் தோல்வியுற்ற பிற்காலப் பாண்டியர்களிடமிருந்து பிரிந்த கிளையே பந்தள மன்னர் பரம்பரை. அக்கிளையில் உதித்த ராஜசேகர பாண்டியரே ஐயப்பனின் தந்தையாக சித்தரிக்கப்படுகிறார்.
ஆவணங்கள் இல்லாத அக்காலத்தில் மட்டுமல்ல, ஆதாரங்கள் மிகுந்த இடைக்காலத்திலும் வாழ்ந்து மடிந்தவர்களே குலச்சாமிகளாக இருக்கின்றனர். விருதுநகர் மாவட்டம் அர்ச்சனாபுரம் அருகே நல்லத்தங்காளுக்கு மூலக்கோயில் உள்ளது. நல்லதங்காள் தன் குழந்தைகளைப் போட்ட கிணறு அதன் பழமை மாறாமல் இன்றும் அங்கே உள்ளது.


இதேபோன்று, மதுரை வீரன் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்து குலத்தையும் நாட்டையும் காத்து நின்றவர். மன்னரின் மகளை காதலித்து மணந்ததால் மாறுகால், மாறுகை வாங்கி கொல்லப்பட்டார். பிறந்த குலத்தெய்வமாக மாறிய அவர், பிறருக்கும் நலம் பயந்து அனைவருக்கும் பொது தெய்வமானதாக கூறுகின்றனர்.
முனியாண்டியின் மூலக் கோயில்கள் மதுரை திருமங்கலம் அருகே உள்ள இரண்டு கிராமங்களில் உள்ளன. இவர் கண்ணகிக்கு நீதி வழங்கிய நெடுஞ்செழியன் என மக்கள் மதிக்கின்றனர். நீதி வழுவியதால் நிம்மதி குலைந்து தவமிருக்க வந்ததாக காரணக்கதை கொல்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருக்களம்பூர் அருகேயுள்ள குமாரபட்டியில் கட்டபொம்மனும், ஊமைத்துரையும் ஒளிந்திருந்தார்கள். அங்கிருந்த போதுதான் அவர்கள் வெள்ளையர்களுக்குக் காட்டிக் கொடுக்கப்பட்டனர். அவர்கள் கடைசியாக இருந்த இடத்தில் ஒரு சிறு வேல் ஊன்றப்பட்டுள்ளது. அந்த இடத்தில் கட்டபொம்மனும், ஊமைத்துரையும் தெய்வமாக வழிபடப்படுகிறார்கள்.
நம் இன மாவேந்தன் இராவணரை தாய்லாந்து நாட்டின் காவல் தெய்வங்களில் ஒருவராக வைத்துள்ளனர். பாங்காங்கில் உள்ள வாட் பா கா புத்தக்கோயிலில் வாசலில் நிற்கிறார் இராவணர்.
மனம் போல் வழிபாடு என்பது தான் குல தெய்வஙகளின் தாரக மந்திரம். சிற்றூர் மக்களின் நம்பிக்கைகளுக்கேற்ப அவர்களின் வழிபாடும் தெய்வங்களின் வடிவங்களும் அமையும். ஆண், பெண் உருவுகள் சமைத்தல் என்பது பல இடங்களில் இரண்டாம் பட்சம்தான். ஏழு செங்கல்களை வரிசையாக நிறுத்தி, சந்தனம், குங்குமம் இட்டு, மலர்சாத்தி அதை ‘ஏழு கன்னிமார்’ என்பார்கள். குத்துக்கல்லை அடையாளமாக வைத்து வழிபடுவதும் உண்டு. தெய்வத்தைக் கலசத்தில் அல்லது பீடத்தில் கொண்டு வந்து நிறுத்துவதைப் பெருந்தெய்வ வழிபாட்டில் ‘ஆவாகனம்’ என்பர். சிறுதெய்வ வழிபாட்டில் ‘குடியெழுப்புதல்’ என்பார்கள். இவ்வாறு கல், பீடம், சூலம், பிடிமண் போன்றவை தெய்வங்களாகக் கருதப்பட்டிருக்கிறது.
உலகாளும் தெய்வங்களை வழிபடுவது கூட தமிழர்களுக்கு கட்டாயமில்லை. ஆனால், குல தெய்வங்களை வணங்கியே தீரவேண்டும். அல்லது குல முன்னேற்றம் கெடும். குழந்தைகளுக்கு முதல் மொட்டை குலதெய்வக் கோவிலில் தன போடுவார்கள். திருமணம், நேர்த்திக்கடன்களை அங்கேயே நிறைவேற்றுவர்.
ஒருவருக்கு செய்வினை செய்யும்போது அவரது குல தெய்வத்தை மந்திரக்கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்டுதான் செய்யமுடியும். மந்திரங்களுக்கு கட்டுப்படாத குலதெய்வங்கள் மந்திரவாதிகளை அழித்த வரலாறும் உண்டு. குல தெய்வ வழிபாட்டை திருக்கார்த்திகையின் போதும், பங்குனி உத்திரத்தின்போதும் செய்வது நல்லது.


வீரனார் போன்ற தெய்வங்கள் போரில் உயிர்நீத்த தெய்வங்கள். வீர, மான இனப்பண்புகளை குல தெய்வங்களை முன்னுதாரணமாக கொண்டு பயில்கிறோம். எனவே, அதனதன் தன்மையில் தெய்வத்தை வழிபடுவதே சிறந்த முறை.
நமது தெய்வங்கள் சித்தாந்தத்தின் அடிப்படையில் அல்ல, வாழ்வியலின் அடிப்படையில் வணங்கப்படுபவர்கள் என்பதே அவர்கள் ஆகமத்துக்கு அப்பாற்பட்டோர் என்பதற்கு சான்று. தத்துவத்தால் வெளிப்படுவதைவிட, சத்துவத்தால் (வாழ்வின் சாராம்சம்) வழிபடப்படுவதே அவர்களின் தனித்தன்மை.
தியாகம் புரிந்தவர்களின் தியாக குணத்தை நாம் குல தெய்வ வழிபாட்டின் மூலம் அடையலாம். வழிபடுதல் என்பது அவர்கள் வாழ்ந்துகாட்டிய வழியில் நடத்தல் என பொருள்படும். வழிபடும் இறைவர்களாம் தலைவர்களின் அதே குணம் நம்மிடையே அதிகரித்து நாளடைவில் கடவுளிடம் மிகவும் நெருங்கிவிடுகிறோம். எனவேதான், மக்களிடம் மக்கள் மொழியில் பேசி, மக்கள் படைத்ததை வாங்கியுண்டு, மக்களை காத்துநிற்கும் சிறு தெய்வங்களான குல தெய்வங்களே தமிழர்களின் பெருந்தெய்வங்களாக கருதப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here