கடந்த மாதம் ஆடி காரை அடகு பிடித்து உடன்குடி சமூக சேவகர் குணசீலன் மீது மோதிக் கொல்ல முயன்ற திமுக பிரமுகர் பற்றி செய்தி வெளியானது. அந்த செய்தி பரவும் முன்பே இது போன்ற மோசடி புகார்கள் குறித்த தகவல்கள் பலவும் வெளிவந்துள்ளன.
சென்னை போன்ற வட மாவட்டங்களில் அடகு பிடித்த வாகனங்களை குற்றச் செயலுக்கு பயன்படுத்துவதைப் போலவே, அவற்றை மோசடியாக விற்று காசு பார்க்கவும் சில கும்பல்கள் முயன்று வருவது தெரிய வந்துள்ளது.
உடன்குடி முத்துக்கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராஜலிங்கம் என்பவர் இதுபோன்று தான் ஏமாற்றப்பட்டதாக புகார் செய்த மனு காவல் நிலைய குப்பை கூடையில் தூங்குகிறது.
அதேபோல வள்ளியூரைச் சேர்ந்த அண்டன் என்பவர் நாங்குநேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகார் இருக்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கிறார்கள்.
அடகு பிடித்த ஆவணங்களை திருத்தியும் உண்மையான உரிமையாளர்களை மறைத்து போலியான நபர்களைக் காட்டியும் வாகன விற்பனை நடக்கிறது. காவல்துறையினரின் கள்ள மவுனமும் கூட்டு நடவடிக்கையும் இத்தகைய மோசடிகள் நிகழ காரணமாக உள்ளன.
ஒரு காலத்தில் கந்து வட்டியை கண்காணித்து தீவிர நடவடிக்கை எடுத்தது போல், அடகு வாகனங்களின் ஆவணங்களை திருத்தி மோசடியாக விற்கும் கும்பலையும் வலை வீசி பிடிக்க வேண்டும்.
அடகு வாகனங்களை ஏதாவது குற்ற செயலுக்கு பயன்படுத்தி இருந்தால் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.