வாரிசு அரசியலில் ‘மருமக்கள் முறை’ எடுபடுமா?

0
623

ஒரு காலத்தில் அரசியல் வாரிசு என்றால் தலைவர்களின் விசுவாசிகள். பின்னர் தலைவர்களின் மகன், மகள்கள் அந்த இடத்தைப் பிடித்தனர். இந்திய அரசியலில் இந்திரா, ராஜிவ், நவீன் பட்நாயக், என வாரிசுகள் வலம் வரத் தொடங்கினர். அது உதயநிதி, கார்த்திக் சிதம்பரம் வரை தொடர்கிறது.


‘வாரிசு அரசியல் நமது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது’ என்று சொன்ன மோடியின் பாஜகவிலும் வருண், பங்கஜ்சிங், பியூஸ்கோயல், தர்மேந்திர பிரதான் என வாரிசுகள் கொட்டம் தான்.
இந்நிலையில், மகன்கள் வளர்ந்து தந்தைக்கே ஆப்பு வைத்த கதை உ.பி. போன்ற மாநிலங்களில் நடந்ததால், மருமகன்களை களத்தில் இறக்கி கலக்குகின்றனர். அரசியலி லில்லாவிட்டாலும் பின்னணியில் சம்பாதிப்பதற்காவது அவர்களை பயன்படுத்துகின்றனர்.

கடந்த மக்களவை தேர்தலில் சோனியா மருமகன் ராபர்ட் வதேரா பற்றி ‘மருமகன்’ என்ற பெயரில் சி.டி.யே வெளியிடப்பட்டது. ரியல் எஸ்டேட் தொழிலில் வெறும் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்து ரூ. 300 கோடி சம்பாதித்ததாக அவரை பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் குற்றஞ்சாட்டினார்.


திரிணாமுல் காங்கிரசின் பொதுச் செயலாளரும், மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜி நிலக்கரி ஊழல் வழக்கில் விசாரணையை எதிர்கொண்டுள்ளார். முலாயம்சிங்கின் இரண்டாவது மருமகள் அபர்ணாசிங் யாதவ், சகோதரி மகன் அனுராக் யாதவ் ஆகியோரும் அரசியலில் நுழைக்கப்பட்டவர்களே. அதில், அபர்ணா பாஜகவுக்கு தாவி பதவியை பிடித்தார்.


கடந்த ஆகஸ்ட்டில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மருமகன் ஷைலேஷ் குமார், பீகாரில் நடந்த அரசு அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றது பெரும் சர்ச்சையை கிளப்பியது. லாலு பிரசாத் மகள் மிசா பாரதி மற்றும் அவரது கணவர் சைலேஷ்குமார் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு நடந்துவருகிறது.


வடக்கே இவ்வளவு அலம்பல்கள் என்றால், தெற்கே குறைவாகவா இருக்கும்?


திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி டெல்லி அரசியலில் தனது பிரதிநிதியாக தனது மருமகனான முரசொலி மாறனை அனுப்பிவைத்தார். அதைப்பின்பற்றி ஸ்டாலின் தனது மருமகன் சபரீசனை டெல்லியில் பழக்குவதாகவும், விரைவில் ஒன்றிய அரசியலில் அவருக்கு ஒரு பதவி அளிப்பாரெனவும் கடந்த ஆண்டு வரை பேச்சு இருந்தது.


அதற்கேற்ப கருணாநிதி மறைவுக்குப் பின்னர் டெல்லி சென்ற ஸ்டாலின், சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கும் போது சபரீசனை உடன் அழைத்துச் சென்றார்.


திமுக ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே 7 புதிய நிறுவனங்களை தொடச்சியாக தொடங்கியதாக அரசியல் விமர்சகர் செல்வக்குமார் குற்றஞ்சாட்டினார்.


தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக, வருமான வரித்துறை திமுக தலைவர்கள் தொடர்புடைய 28 இடங்களில் சோதனை நடத்தியது. இதில், சபரீசனுக்கும் அவருக்கு நெருக்கமானவருக்கும் உரிய இடங்களில் சோதனை நடைபெற்றது.


கடந்த மாதம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சபரீசன் சிறப்பு யாகம் நடத்தினார். தடுப்பு அரண் அமைத்து யாகம் நடந்ததால் பொதுமக்கள் வள்ளி குகைக்கு செல்ல முடியாமல் 3 மணி நேரம் அவதிக்குள்ளானதாக விமர்சனம் எழுந்தது. இப்போதும் மகனையும், மருமகனையும் வைத்து ஸ்டாலின் ஆட்சி செய்கிறார் என்று பொதுவெளியில் வெளிப்படையாக பேச்சு உள்ளது.


என்னவோ போங்கள், நம் இந்தியாவின் வாரிசு அரசியலை பார்த்துதன அண்டையில் இலங்கையில் அதை அரங்கேற்றினார்கள் எனலாம். அதுமட்டுமா? அமெரிக்காவில் ஒபாமா தனது மகள் இவான்கா, மருமகன் ஜாரெட் குஷ்னருக்கு ஆட்சியில் பல முக்கிய வேலைகளை கொடுத்ததற்கும் இந்தியா தான் ரோல் மாடல் என்றால் மிகையில்லை.


ஆனால், என்னவோ, மகன்களை கூட இந்திய மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். தந்தை வழிச்சமூக அமைப்பில் மருமகன்களின் ஆதிக்கத்தை அவர்கள் மனம் ஏற்க மறுக்கவே செய்கிறது. பிரியங்கா என்றால் ஓக்கே, ராபர்ட் வதேரா என்றால் நோ, நோ தான். தமிழகத்திலும்ஈது மாறவா போகிறது?

அநேகமாக இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்ற இந்த நவீன வாரிசு அரசியல் முறை, அங்கு எடுபடும் காலத்தில் இங்கு ஒழிந்துவிடும் என்றே தோன்றுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here