காசுக்கு கவி பாடும் கவிராயர்களாலும், கூலிக்கு கூவும் அடிமைகளாலும் பொய் கூட உண்மையாக தோற்றம் பெறுகிறது. அதுவே தகவலாகி பின்பு வரலாறு ஆகவும் மாறி போய் விடுகிறது. பொன்னியின் செல்வன் வரலாற்று புதினம் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்றாலும் அதைவிட அதிக சப்பைக் கட்டுகள் ஆன்மீக, அரசியல் தலைவர்களின் மேடைகளில் அரங்கேறுகின்றன.
காவேரி கூக்குரல் இயக்கமும் கோவை கட்டுனர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கமும் இணைந்து கோவை சீங்கப்பதி கிராமத்தில் மரக்கன்றுகள் வழங்கும் விழாவை நடத்தின.
என்ன பொருத்தம் பாருங்கள், மரங்களை நட்டு வனங்களை உருவாக்குவதாக பசப்பித் திரியும் ஓர் அமைப்பும், காடுகளை அழித்து கட்டடம் ஆக்கும் ஒரு அமைப்பும் இணைந்து விழா நடத்தியது விந்தை அல்லவா?
அதை செல்வம் ஏஜன்சீஸ் நிர்வாக இயக்குனர் நந்தகுமார் தனது உரையில் குறிப்பிட்டார்.”கட்டடங்கள் கட்டிட நிறைய மரங்களை அழித்தாக வேண்டிய நமது வாழ்க்கைச் சூழல் இருக்கிறது”என்றார் அவர்.
அதில் பாருங்கள், 1 லட்சம் மரங்கள் வழங்கும் விழா என்று எண்ணிக்கையை பெரிதாக்கி காட்டும் இத்தகைய விழாக்களில் ஆயிரங்கள் எண்ணிக்கையிலேயே மரக்கன்றுகள் வழங்கப்படும். அதை பேராசைப்பட்டு வாங்கிச் செல்பவர்களும் எங்கேயும் நட்டு வளர்ப்பதில்லை.
அதற்கு எங்கு இடம் இருக்கிறது? அவர்களுக்கு எங்கே நேரம் இருக்கிறது? விழாக்களில் கலந்து கொள்ளும் ‘மேனாமினுக்கிகள்’ தான் நூற்றுக்கணக்கில கன்றுகளை பெற்றுச் செல்வார்கள்.
கன்றுகளை கொடுப்பதோடு தொண்டு நிறுவனங்களில் பணி முடிந்தது. சில நாள் கழித்து ஏதோ அந்த லட்சம் (?)மரக்கன்றுகளும் நடப்பட்டு வளர்வதாக பத்திரிகைகளில் கதை விடுவார்கள். அடுத்தடுத்த கூட்டங்களில் அவர்களின் கைக்கூலிகள் அந்த மரங்கள் வளர்ந்து சோலையாகி, மலர்ந்து, கனிந்து நிற்பதாக அளந்து விடுவார்கள்.
அப்படித்தான் இந்த விழாவில் நெல்லேரை விட்டுவிட்டு வெறும் வாயால் உழுகின்ற ‘சொல்லேர் உழவன்’ (?) விவசாய சங்க தலைவர் செல்லமுத்து, ஜக்கி வாசுதேவ் அருமை, பெருமைகளை கூவியுள்ளார். காவிரியின் கூக்குரல் இயக்கம் தொடங்கிய காலம், அது வளர்த்த மரங்கள் பற்றிய எந்தவித தரவும் இல்லாமல் வந்தபடி புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.
ஜக்கியிடமிருந்து தங்கள் நிலத்தை பாதுகாக்க மக்கள் சட்ட போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் உண்மையை மறைத்து, ” சத்குரு அவர்கள் சமீபத்தில் மண் காப்போம் விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டு மிகச்சிறப்பான செயலை துவங்கியுள்ளார்’‘ என்று தொடங்கியுள்ளார்.
அதுமட்டுமல்ல, ‘‘இப்போது நல்ல மழை பெய்யும் சூழல் உள்ளது. இதற்கு ஈஷா நட்டிருக்கும் இந்த 8 கோடி மரங்களும் ஒரு காரணம் என்று உறுதியாக சொல்லலாம்’‘ என்று அடித்துவிட்டிருக்கிறார்.
கூட்டத்தில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பேசுகையில், “காவேரி கூக்குரல் இயக்கம் அதன் பணிகளுக்காக ஐநா உள்ளிட்ட பல சுற்றுச்சூழல் அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது‘‘என்று கரகாட்ட கோஷ்டி பாணியில் விளம்பரப் படுத்திக்கொண்டார்.
அதுமட்டுமல்ல, காவேரி கூக்குரல் இயக்கத்தின் நோக்கம் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நடுவதாம்?! அடடா, அவையெல்லாம் வளர்ந்தால், சாலையில் அல்ல, சோலையில் தான் நாம் நடந்து செல்வோம்.
ஒரு பக்கம் பழங்குடியினரின் நிலத்தை பறித்து அதிலே கட்டடங்கள் கட்டி ஆடம்பர ஆன்மீகப் பணி செய்து வரும் ஈஷா, பழங்குடியினர் பெயரிலேயே இந்த நிகழ்ச்சியை நடத்தியது. அத்தகைய நில ஆக்கிரமிப்பை எதிர்க்க வேண்டிய விவசாயிகள் சங்கத் தலைவர், அடிப்படையே இல்லாமல் நிறுவனத்தை புகழ்ந்து தள்ளுகிறார் என்றால் தாயை கொன்னவனுக்கும் ஊரிலே நாலுபேர் என்பது உறுதியாகிறதல்லவா?