ஆறுமுகநேரியில் இயங்கி வரும் தாரங்கதாரா கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கு எதிராக செயல்பட்ட திமுக நிர்வாகி ஒருவரை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ‘ உனது ஒன்றிய செயலாளர் பொறுப்பையும், பஞ்சாயத்து தலைவர் பதவியையும் பறித்து “மிசா”வில் ஜெயிலில் வைத்துவிடுவேன். ஜகோர்ட் நிதிபதி எனது ஆள்’ என்று கூறி மிரட்ட, ஒரு கட்டத்திற்கு மேல் கொதித்து எழுந்த அந்த நபர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கடுமையாக திட்டியாதாக பரபரப்பு ஆடியோ சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் உலவுகிறது .
இது குறித்து விசாரித்தால், உண்மை வேறாக இருக்கிறது.
அந்த ஆடியோவில் பேசுகின்ற எதிர்முனை நபர் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பத்மநாபமங்கலம் ஊராட்சி தலைவராக பதவி வகித்த வைகுண்டம். தொடர்ந்து அவரது குடும்பத்தினரே அங்கு ஊராட்சி தலைவராக இருந்து வருகின்றனர். தற்போது அவரது மனைவி சிவகாமி தலைவராக உள்ளார்.
அப்பகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவுடன் இயக்கவிருந்த குவாரிக்கு அனுமதி கோரி விண்ணப்பித்த போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்மக்கள் கிளம்பினர். வைகுண்டம் கட்சியின் ஒன்றிய செயலாளராக இருந்தாலும் ஊரின் முடிவுக்கு ஏற்ப குவாரி அமைப்பதை எதிர்த்து மனு அளித்தார். அதற்காகவே அனிதா ராதாகிருஷ்ணன் அவரை தொலைபேசியில் அழைத்து கண்டித்துள்ளார். இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தை முற்றி தகராறு ஆக முடிந்துள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால், கைப்பேசி மூலம் இருவரையும் இணைத்து பேச வைத்தவர் தூத்துக்குடி பில்லா ஜெகன். மாவட்ட செயலாளரும் ஒன்றிய செயலாளரும் கடுமையாக மோதியதும், பேச்சினூடே நுழைந்து பில்லா ஜெகன் சமாதானப்படுத்துவது முழுமையான ஆடியோ இணைப்பில் உள்ளது. அது, சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட ஆடியோவில் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஆடியோவில் பில்லா ஜெகனின் குரல் பதிவு துண்டிக்கப்பட்டதற்கான ரகசியம் தெரியவில்லை. அதுமட்டுமின்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த உரையாடலை தற்போது வெளியிடும் தாத்பரியமும் புரியவில்லை.
இதற்கிடையே, வைகுண்டம் சில மாதங்களுக்கு முன்பு குண்டர் தடுப்புக் காவல் சட்டப்படி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அரசியல் காரணங்களால் அது நடந்தது என்று அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர். அமைச்சர் தரப்பில் அதை மறுக்கின்றனர். ஏற்கனவே அவர் மீது பல வழக்குகள் இருந்ததாலும், சிவராமன் என்பவருக்கு வெடிகுண்டு வீசி கொலை மிரட்டல் விடுத்ததாலும் குண்டர் சட்டம் பாய்ந்தது. அதனாலேயே அவரது ஒன்றிய செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டது என்று விளக்கம் அளிக்கின்றனர்.
எது எப்படியாயினும். சுற்றுச்சூழலை பாதிக்கும் குவாரி பிரச்சனையில் அரசியல் தலையீடு இருக்கிறது என்பதும், அதிகாரிகளை மட்டுமல்ல நீதிமன்றத்தையே அது வளைக்கக் கூடும் என்பதும் இந்த உரையாடல் மூலம் தெரிய வருகிறது.
ஆபாச சொற்களை நீக்கிய ஆடியோ பதிவு உங்களுக்காக கீழே உள்ளது.