தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தில் கடந்த இரு வாரங்களாக மர்ம நோயால் கால்நடைகள் செத்து மடிகின்றன. திடீரென மாடுகளின் வாயில் நுரை தள்ளுகிறது. இரை எடுக்காமல் இரு நாட்களிலேயே இறந்து படுகிறது. கால்நடை மருத்துவரின் எந்த சிகிச்சையும் எடுபடவில்லை.
இந்த மர்ம நோய் பற்றி தாமதமாகவே ஆராயும் முடிவுக்கு வந்த இணை இயக்குனர் நாளை கால்நடை பல்கலைக் கழகத்திலிருந்து மருத்துவக்குழு வரும் என அறிவித்துள்ளார். இதுவரை 30க்கும் மேற்பட்ட மாடுகள் மடிந்துள்ளன.
இறந்த மாடுகளின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை டெல்லிக்கு சோதனைக்கு அனுப்பி உள்ளனர். அது வந்த பின்பே நோயின் தன்மையை தெரியவரும் என்கின்றனர். இதற்கான தடுப்பூசியும் கைவசம் இல்லை. வரும் 20ஆம் தேதி அளவிலேயே அதுவும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கால்நடை இறப்பு பற்றி தனக்கு தாமதமாகவே தகவல் வந்ததாக ஆர்டிஓ தெரிவித்துள்ளார். காப்பீடு செய்யப்பட்ட கால்நடைகளுக்கு மட்டும் இழப்பீடு என்று கூறிவருகிறார்கள். ஆனால் அதுபற்றி அறியாத மிக ஏழ்மையான வீடுகளிலும் பிழைப்புக்கு ஒரே வாய்ப்பான மாடுகள் இறந்துள்ளன.
இது புது வித மர்ம நோய் என்பதனால் எல்லா மாடுகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கால்நடை வளர்ப்பவர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள். துரிதமாக மருத்துவ ஆய்வு நடத்தி மேலும் மாடுகள் மடியாத வண்ணம் பாதுகாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்கள்.