காஷ்மீர் மாநிலத்தின் 370ஆவது பிரிவு அரசியல் உரிமையை ரத்து செய்து, அதை 3ஆக பிரித்து யூனியன் பிரதேசமாக்கியதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. பாகிஸ்தான் இந்த பிரச்சினையில் மூக்கை நுழைக்கிறது. மத்தியஸ்தம் பேசுவதற்கு தயார் என்று டிரம்ப் வேறு நூல் விடுகிறார்.
இந்நிலையில், பிரான்சில் நடக்கும் ஜி 7 மாநாட்டுக்கு இடையே டிரம்ப் _ மோடி சந்திப்பு நிகழவுள்ளது. இதில் பல்வேறு விடயங்கள் பேசப்படவிருந்தாலும், காஷ்மீர் பிரச்சினை பற்றியும் பேச்சு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப அதுபற்றி பேசப்போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
எற்கனவே, இந்திய, பாகிஸ்தான் பிரதமர்களிடம் தொலைபேசியில் இதுபற்றிய பேச்சை டிரம்ப் தொடங்கியுள்ளார். இரு நாடுகளும் அமைதி காக்கவேண்டும் என்ற ஆலோசனையும் வழங்கியுள்ளார்.
இந்தியா காஷ்மீர் பிரச்சினையில் 3ஆவது நாட்டின் நடுவண்மையை அனுமதிப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளது. அப்படி பேசத்தொடங்கினால் காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக அங்கீகரிப்பது போலாகிவிடும்.
எனவே, டிரம்பிடம் நடக்கும் பேச்சுவார்த்தையில் இந்த உறுதியை மோடி கடைப்பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.