தமிழக திரையுலகின் பாடலாசிரியர்களில் ஒரு காலத்தில் கொடி கட்டிப்பறந்தவர் மதுரகவி பாஸ்கரதாஸ். தெருவோர பிரஜைகளும், பஸ், ரயில் நிலைய இரவலர்களும் இவரது பாடலை பாடினார்கள். இதனால் ‘பிச்சை குரு பாஸ்கர தாஸ்’ என்று இவருக்கு செல்லப்பெயர் உண்டு. ஒருமுறை சிறுமி ஒருத்தி கொடுமுடி ரயில் நிலையத்தில் இவரது பாடலை பாடிக்-கொண்டிருந்தாள். அப்போது அந்த வழியாக பயணம் செய்த பிஎஸ் வேலு நாயர் அவரை அழைத்து சினிமா வாய்ப்பு கொடுத்தார். அவர் தான் கேபி சுந்தரம்பாள்.
இதே போன்றதொரு நல்வாய்ப்பு மேற்கு வங்க மாநிலம் ரானாகட் ரயில் நிலையத்தில் லதா மங்கேஷ்கர் பாடலை பாடிக்கொண்டிருந்த ரானு என்ற 51 வயது பெண்ணுக்கு கிடைத்துள்ளது. இவர் லதா மங்கேஷ்கரின் பாடல் ஒன்றை பாடிக்கொண்டிருந்ததை சமூக வலைத்தள வாசி ஒருவர் படம் பிடித்து பரப்ப, அதைப்பார்த்த தயாரிப்பாளர் ஹிமேஷ் ரேசம்மையா, ரானுவை அழைத்து தனது படத்தில் பாட வாய்ப்பு அளித்துள்ளார்.
இளம்வயதில் மேடை கச்சேரியில் பாடியதாகவும், குடும்பத்தினர் விரும்பாததால் அதை விட்டுவிட்டதாகவும் ரானு தெரிவித்துள்ளார்.
‘அவரது குரலில் தெய்வீகத்தன்மையை உணர்கிறேன்’ என்கிறார் ஹிமேஷ் ரேசம்மையா.இப்போது நிறைய தயாரிப்பாளர்கள் ரானுவை புக் செய்ய தயாராகவுள்ளனராம்.
திறமையை வளர்க்க ஓர் தளம் இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்பதற்கு இந்த இரானு என்றபெண் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.