பொள்ளாச்சியில் சுகாதாரமற்ற 780 கிலோ இனிப்பு, காரம் அழிப்பு

0
297



தீபாவளியையொட்டி கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவின் பேரில் பொள்ளாச்சியில் உள்ள உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தமிழ்செல்வன் தலைமையில் அதிகாரிகள் சுப்புராஜ், வேலுச்சாமி ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு நடத்தினர்.


கோவை ரோடு, உடுமலை ரோடு, மீன்கரை ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் 18 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. அப்போது சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டு இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான 780 கிலோ இனிப்பு மற்றும் கார வகைகள் பறிமுதல் செய்யப்பட்டு, முற்றிலும் அழிக்கப்பட்டன.


இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தமிழ் செல்வன் கூறியதாவது:-


குறைவான ஆயுளை கொண்டவை இனிப்பு வகைகள். இதில் குறிப்பாக பால் உணவு பொருட்களின் காலஅளவு 4 நாட்கள் மட்டுமே சுகாதாரமாக இருக்கும். அதன்பிறகு நுண்ணியிர் வளர்ச்சி ஏற்பட்டு அந்த உணவு நஞ்சாகி விடும்.


பண்டிகை காலங்களில் பேக்கரி, ஓட்டல், திருமண மண்டபங் கள், தற்காலிகமாக செயல்படும் பலாகார கடைகளில் இனிப்பு, கார வகைகளை தரமானதாக இருக்க வேண்டும். சுகாதாரமற்ற முறையில் ஈக்கள் மொய்க்கும்படி திறந்த வெளியில் வைக்க கூடாது.

ஒரு முறை உபயோகித்த சமையல் எண்ணெய்யை மீண்டும், மீண்டும் உணவு தயாரிக்க பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மூலப்பொருட்களின் விவரங்கள் முழுமையாக அச்சிடப்பட்டு இருக்க வேண்டும். இனிப்பு மற்றும் கார வகைகளை தூய்மையான குடிநீரை கொண்டு தயாரிக்க வேண்டும்.


பால் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை தனியாகவும், அவற்றை உபயோகிக்கும் கால அளவை லேபிளிலும் அச்சிடப்பட வேண்டும். தரமான உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும்.


தற்போது செய்யப்பட்ட ஆய்வில் அளவுக்கு அதிகமாக கலர் பொடிகள் சேர்த்த இனிப்பு வகைகள், கார வகைகளில் இருந்து உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதன் முடிவின்படி சம்பந்தப்பட்ட உணவு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here