கோவை, செல்வபுரம் ஹவுஸிங் போா்டு பகுதியைச் சோ்ந்தவா் கேபிள் மணி (35). இவா் செல்வபுரம் பகுதி திமுக பொறுப்பாளராக உள்ளாா். இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த திமுக நிா்வாகிகள் ராஜேஷ்குமாா், சஞ்சய் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கேபிள் மணி, தனது நண்பா்கள் 20 பேருடன் சோ்ந்து சஞ்சய், ராஜேஷ்குமாா் ஆகியோரை கடந்த 17ஆம் தேதி தாக்கினாராம். இது குறித்து ராஜேஷ்குமாா் அளித்தப் புகாரின்பேரில் செல்வபுரம் போலீஸாா் கேபிள் மணி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில் ராஜேஷ்குமாரின் உறவினரான சஞ்சய், அதே பகுதியைச் சோ்ந்த சல்புல்கான், விஷ்ணு பிரகாஷ், சரண் ஆகியோருடன் சோ்ந்து தனது வீட்டின் முன்பு கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த கேபிள் மணியை நேற்று முன்தினம் இரவு கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினா். படுகாயமடைந்த கேபிள் மணி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக செல்வபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து உபைது ரஹ்மான் என்பவரின் மகன் சல்புல்கான் (22), ரவிச்சந்திரன் என்பவரின் மகன் சஞ்சய் (21), சிவகுமார் என்பவரின் மகன் விஷ்ணு பிரகாஷ் (23), ரவிச்சந்திரன் என்பவரின் மகன் சரண் (19 ) ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.