பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய அரசில் நிதித்துறை மந்திரியாகவும் இருந்தவர், அருண் ஜெட்லி (வயது 66).
மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வந்த இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார் இந்த நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த அருண் ஜெட்லியின் உடல்நிலை மோசமடைந்தது. சிகிச்சை பலனின்றி நேற்று நண்பகல் 12.07 மணியளவில் அருண் ஜெட்லி காலமானார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பா.ஜனதா மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மருத்துவ மனைக்கு சென்று ஜெட்லியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பா.ஜனதா தலைவர் அமித்ஷா மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் மலர்வளையம் வைத்து ஜெட்லியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து ஜெட்லியின் உடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகலில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நிகம்போத் காட் பகுதியில் தகனம் செய்யப்படுகிறது. இந்த தகவலை பா.ஜனதா தலைவர் சுதான்ஷு மிட்டல் தெரிவித்தார்.
காலமான அருண் ஜெட்லிக்கு மனைவி, ஒரு மகன், மகள் ஆகியோர் உள்ளனர். காங்கிரஸ் கட்சியும் ஜெட்லி மறைவுக்கு இரங்கல் வெளியிட்டு உள்ளது.