,
கோவை மாவட்ட தீவிர குற்ற தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கலையரசி நேற்று முன்தினம் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இதற்கான உத்தரவை கோவை சரக டி ஐ ஜி வழங்கியுள்ளார்.
சிறந்த முறையில் பணியாற்றி வந்த பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் கூறியதாவது:
இன்ஸ்பெக்டர் கலையரசி கடந்த 2004 ஆண்டு சப் இன்ஸ்பெக்டராக தேர்வு பெற்று முதலில் தஞ்சாவூரிலும் திருச்சி ,திருநெல்வேலி,மதுரையில் பணிபுரிந்தார். அதையடுத்து இன்ஸ்பெக்டராக கடந்த ஆண்டு பதவி உயர்வு பெற்று தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு மேற்கு மண்டலத்திற்கு வந்தார்.
கோவை மாநகர ஆர்.எஸ்.புரம் போலீஸ் போலீஸ் ஸ்டேஷனில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த காலகட்டத்தில் ஏராளமான குற்ற வழக்குகளில் விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற்றவர்..
அதன் பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கோவை பொருளாதார குற்ற பிரிவில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார்.அப்போதும் பல மோசடி நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து மோசடி நிதி நிறுவனத்தை கோவையில் யாரும் துவக்க விடாத அளவு திறமையாக செயல்பட்டவர்.
இந்த ஆண்டு திருப்பூரிலும் பின்னர் பேரூர் அணைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தார்.அப்போது துடியலூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் விஸ்ணு (24) என்பவர் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அந்த சிறுமி கர்ப்பமானார்.இதில் விஸ்ணு போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். விஸ்ணு மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க இன்ஸ்பெக்டர் கலையரசி ஏற்பாடு செய்தார். மேற்கு மண்டல போலீசில் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது செய்தது முதல் முறை என்பதால் போலீஸ் எஸ்.பி.உட்பட பல அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் கலையரசியை பாராட்டி வெகுமதி அளித்தனர்.
இதையடுத்து கலையரசி கோவை மாவட்ட தீவிர குற்ற தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டார்.
இந்நிலையில் திடீரென கலையரசி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கு பின்னணியில் ஒரு பெண் போலீஸ் உயர் அதிகாரியின் தூண்டுதல் இருப்பதாக போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இன்ஸ்பெக்டர் கலையரசி சஸ்பெண்ட்டிற்கு காரணமாக , அவர் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவில் இருந்தபோது வழக்கு பதிவு செய்ய தாமதித்தாகவும் , குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
கோவை பொருளாதார குற்றப்பிரிவில் பணிபுரிந்த போது நடைபெற்றதாக கூறப்படும் புகாருக்கு தற்போது கோவை மாவட்ட போலீசில் எஸ்.பி. கட்டுப்பாட்டில் சிறப்பாக பணிபுரியும்போது சஸ்பெண்ட் செய்ய பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.வேண்டுமென்ரே ஒரு பெண் உயர் அதிகாரியின் தூண்டுதல் பேரில் இந்த சஸ்பெண்ட் சம்பவம் நடைபெற்று இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், அந்த பெண் உயர் அதிகாரி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கோவையிலே பணியாற்றி வருவதாகவும் ,இதே போல பல பெண் போலிஸாருக்கு எதிராக செயல்பட்டுள்ளார் என்றும் பேசப்படுகிறது.