,
காரமடை அண்ணா வீதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் ராஜேந்திரன் (52). இவரிடம் காரமடை அட்டியன்ன கவுண்டர் வீதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி கவிதா கடந்த 2016ஆம் ஆண்டு ராஜேந்திரனிடம் எட்டு லட்ச ரூபாய் கடனாக வாங்கியிருந்தார். இதற்காக அவரது சொத்து பத்திரத்தை அடமானமாக கொடுத்திருந்தார். மேலும் அதற்குரிய பிராமிசரி நோட்டுகளில் கையெழுத்து போட்டு பணத்தை வாங்கியிருந்தார். பணம் வாங்கியதில் இருந்து கவிதா வட்டி செலுத்தவில்லை . இதையடுத்து ராஜேந்திரன் பலமுறை கவிதாவிடம் கேட்டபோதும் சரியான பதில் அளிக்காமல் இருந்து வந்துள்ளார்.
இதற்கிடையே கவிதா ராஜேந்திரனிடம் அடமானமாக கொடுத்த சொத்து பத்திரத்தை காணவில்லை என்று கூறி கோவை ஆர்எஸ் புரம் போலீஸ் ஸ்டேஷன் மூலம் புகார் அளித்து பத்திரம் காணவில்லை என்ற சான்றிதழை பெற்றார். மேலும் அந்த சான்றிதழை வைத்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் கொடுத்து புதிதாக ஆவணங்களை பெற்றுள்ளார் .அந்த சொத்தை அவரது குழந்தைகளுக்கு தான செட்டில்மெண்ட் செய்து பதிவும் செய்துவைத்தார் .இந்த தகவல் ராஜேந்திரனுக்கு தெரியவந்தது.
இதையடுத்து ராஜேந்திரன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் தவறான தகவல்களை கொடுத்து மோசடி செய்யும் நோக்கத்தில் போலீசாரையும் அரசு அதிகாரிகளையும் ஏமாற்றி சொத்து பத்திரத்தை பெற்ற கவிதா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதை அடுத்து 420 உட்பட 3 பிரிவுகளின் கீழ் கோவை ஆர்.எஸ். புரம் போலீசார் கவிதா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
,
.