ராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டியாரின் 150-வது பிறந்தநாள் விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு ராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டியார்-சீத்தம்மா உருவ சிலைகள் மற்றும் சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டு நாயுடு பேசியபோது நம்முடைய மொழிகள் தான் நம்மை இணைக்கின்றன. மொழிகள் நம்முடைய அறிவாற்றலையும், பரந்து விரிந்த மாற்று யோசனைகளையும் முன்னெடுப்பதற்கு உதவிக்கரமாக இருக்கும். வாய்ப்பு இருக்கும் இடங்களில் இந்திய மொழிகளை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களை தேர்வு செய்தும், தரமான புத்தகங்களை வழங்கியும் கல்வியில் இந்திய மொழிகளை ஊக்கப்படுத்தவேண்டும்.
அனைவருக்கும் உயர்தர கல்வியை வழங்கி நேரடியாக நம்முடைய தேசத்தை சமமான மற்றும் துடிப்பான அறிவாற்றல் மிகுந்த சமூகமாக மாற்றுவதற்கான பங்களிப்பினை கொடுப்பதுதான் இந்த ஒருங்கிணைந்த கல்வி முறையின் நோக்கம் ஆகும். தாய்மொழி எல்லோருக்கும் முக்கியம். கல்வியை உள்ளடக்கிய மற்றும் உலக அளவிலான வகையில் மாற்றுவதற்கு குறைந்தது 5-ம் வகுப்பு வரையிலான தொடக்க கல்வியை மாணவர்களுக்கு தாய்மொழி அல்லது உள்ளூர் மொழியிலேயே கட்டாயம் கற்றுக்கொடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையால் பாடத்திட்டங்கள் பற்றிய மாணவர்களின் எண்ண ஓட்டங்கள் மிகவும் எளிதாக இருக்கும். மொழி என்பது நம்முடைய சிந்தனைகள் மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கருவியாகும். ஆனால் ஒவ்வொரு மொழிகளுக்கான இலக்கியம் வளம் மிகுந்தது மட்டுமின்றி, வேறுபாடானது.
ஒரே நாடு, ஒரே மக்களாக இருக்கிறோம். தாய்மொழியை உதாசீனப்படுத்தாமல், தாய்மொழி கல்வியுடன் பல்வேறு மொழிகளையும் கற்றுக்கொள்ளவேண்டும். மொழிகளை படிப்பதில் ஒருபோதும் திணிப்போ, எதிர்ப்போ இருக்கக்கூடாது. எல்லோரும் எல்லா மொழிகளையும் படிக்கலாம். சிலர் மொழி பிரச்சினையில் சர்ச்சையை ஏற்படுத்துவது தவறானது.இத்தகைய நிலையை அடைவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார் வெங்கையாநாயுடு தனது உரையை தமிழில் தொடங்கி, தெலுங்கு, ஆங்கிலம் என்று மும்மொழியில் பேசினார் நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழ்நாடு தலைமை தபால்துறை தலைவர் எம்.சம்பத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்