கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் பிரதீவ் ராஜ்குமார் (37). இவர்களுக்கு சொந்தமான குடும்ப சொத்து தொண்டாமுத்தூர் அடுத்த வேடப்பட்டி கிராமம் கீழ் சித்திரை சாவடி பகுதியில் உள்ளது. இவரது இடத்திற்கு அருகிலேயே பிரபல கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயனுக்கு சொந்தமான இடம் உள்ளது. நீண்டகாலமாக நரேன் கார்த்திகேயன் மற்றும் அவரது குடும்பத்தார் அவர்களது தோட்டத்திற்கு செல்வதற்கு பிரதீவ் ராஜ்குமாரின் இடத்தை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து இரு தரப்பிலும் சமாதான பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் சமாதான பேச்சுவார்த்தைக்கு நரேன் கார்த்திகேயன் குடும்பத்தார் உடன்படவில்லை.
இதை அடுத்து சர்வேயர் மூலம் நிலத்தை அளந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நரேன் கார்த்திகேயன் ஏற்பாடு செய்த சர்வேயர் மூலம் நிலத்தை அளக்கும் பொழுது நரேன் கார்த்திகேயனுக்கு சொந்தமான இடம் பிரதீவ் ராஜ்குமாரின் இடத்திற்குள் இருப்பதாக தெரிவித்தனர் .தொடர்ந்து மறு அளவைக்கு பிரதீவ் ராஜ்குமார் விண்ணப்பித்தார். மறு அளவை செய்தபொழுது நரேன் கார்த்திகேயன் கொடுத்த அளவைக்கும் புதிதாக அளவீடு செய்தபோது வந்த அளவைக்கும் வித்தியாசம் இருந்தது.
தொடர்ந்து பிரதீவ் ராஜ்குமார் இதுகுறித்து கோவை மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் .வழக்கு நிலுவையில் உள்ள சூழலில் வருகிற 27ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நரேன் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆட்கள் மூலம் பிரச்சினைக்குரிய பிரதீவ் ராஜ்குமாருக்கு சொந்தமான இடத்தில் கம்பி வேலி அமைத்தனர்.
இதுகுறித்து பிரதீவ் ராஜ் குமார் தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் போலீசார் கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைப்போல நரேன் கார்த்திகேயன் அமைத்த கம்பி வேலிகளை பிரதீவ்ராஜ்குமார் தோட்டத்தில் வேலை செய்பவர்கள் சேதப்படுத்தி விட்டனர் என்று அவர்கள் அளித்த புகாரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.