சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி:
தமிழகம் மட்டும் அல்ல இந்தியாவே திரும்பி பார்க்கின்ற வகையில் சட்டமன்றத்தில் மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இந்தியாவில் உள்ள விவசாயிகள் அனைவரும் பாராட்டி வரவேற்கின்றனர். பல லட்சம் விவசாயிகள் போராடும் போது குறைந்தபட்சம் கோரிக்கை என்னவென்று மத்திய அரசோ, பிரதமரோ, வேளாண்அமைச்சரோ விசாரிக்கவில்லை.
காவிரி பிரச்சனையில் சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் கேட்டு தான் முடிவு எடுக்க வேண்டும். கர்நாடக மாநில அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் ஒரு வரைவு திட்டத்திற்கு அனுமதி வழங்கி உள்ளனர். பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகின்ற கதையாக இருக்கிறது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் தண்ணீருக்காக அல்லல்படும். தமிழகம் உணர்வுப்பூர்வமாக இருக்கிறது. இதில் அரசியலோ மாநிலங்களுக்கு இடையே பகையோ கிடையாது.
சமூக வலைத்தளங்களில் இருப்பது போல் மோடி இந்தியாவை விற்று வருகிறார். பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவின் ஆலயங்கள் என நேரு தெரிவித்தார். ரயில்வே உள்பட பொது துறை நிறுவனங்கள் விற்பது தவறானது. மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட சொத்து. அதை தனியாருக்கு விற்பதை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது.
இந்தியா முழுவதும் விலையேற்றங்களை எதிர்க்கிறோம். தமிழகத்தில் சிமெண்ட் விலை அதிகமாகவும் மராட்டியத்திலும் அரியானாவிலும் குறைவாக இருக்கிறது. இதற்கான காரணங்களை கண்டு அறிந்து மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.