காந்தியக் கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை நினைவுநாள்

0
723

தமிழறிஞரும், கவிஞருமான நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடியவர்

தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெற முடியும் என்ற முடிவுக்கு வந்தவர். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி இருந்ததால் இவர் காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுகிறார்.

இராமலிங்கனார் தற்போதைய நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வெங்கடராமன், அம்மணியம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். திருச்சி மாவட்ட காங்கிரசின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர்.

தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1932-இல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர்.

‘தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்’ பதவியும், `பத்ம பூஷண்’ பட்டமும் பெற்றவர். சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தவர்.

‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மலைக்கள்ளன், மரகதவல்லி, கற்பகவல்லி, காதல் திருமணம் உள்ளிட்ட பல நாவல்களை எழுதியுள்ளார். இவரது ‘மலைக்கள்ளன்’ நாவல், எம்ஜிஆர் நடிப்பில் திரைப்படமாக வந்தது. இசை நாவல், கட்டுரை, சுயசரிதம், புதினம், திறனாய்வு, நாடகம், கவிதைத் தொகுப்பு, சிறு காப்பியம், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் அனைத்துக் களங்களிலும் முத்திரை பதித்தவர். மொத்தம் 66 நூல்களை எழுதியுள்ளார்.

தேசியக் கவிஞர், காந்தியக் கவிஞர், காங்கிரஸ் புலவர், அரசவைக் கவிஞர் என்றெல்லாம் போற்றப்பட்ட நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை 1972 ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி 84-வது வயதில் மறைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here