கூடங்குளம் அணு உலைக்கு குமரி மாவட்டத்தில் ஓடும் பழையாற்று நீரை தாரை வார்க்க சபாநாயகர் ஆவுடையப்பன் முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து அணுஉலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார் வெளியிட்டுள்ள திறந்த மடலில், ‘
‘எட்டுக் கோடி தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரமும், புகழும் பெற்ற சட்டப் பேரவையின் தலைவராகிய நீங்கள் ஓர் அணுசக்தித்துறை அதிகாரியிடம் போய் கோரிக்கை மனு கொடுப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாக இருக்கிறது.
கூடங்குளம் திட்ட அதிகாரிதான் உங்களிடம் முறையிட வேண்டுமே தவிர, நீங்கள் அவரிடம் போய் வெவ்வேறு கோரிக்கைகள் அடங்கிய இரு வேறு மனுக்களை சமர்ப்பித்து, பதிலை எதிர்பார்த்து நிற்கக்கூடாது’ என்று தொடங்கி
குமரி மாவட்டம் பழையாறில் வரும் உபரி நீர் கடலில் வீணாகக் கலக்கிறது என்றும், அதை இறைவைப் பாசனம் மூலம் இராதாபுரம் கால்வாய்க்கு அனுப்ப வேண்டும் என்றும், அதற்காகும் கட்டமைப்புச் செலவை ஏற்றுக்கொண்டு, நீண்டகால நடைமுறைச் செலவுகளையும் கூடங்குளம் அணுஉலை நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று அந்த அதிகாரிகளிடம் விண்ணப்பம் கொடுத்திருக்கிறீர்கள்.
பழையாறில் வருவது உபரி நீரா என்பதை முடிவு செய்வதற்கும், அதை எப்படி பயன்படுத்துவது என்று முடிவெடுப்பதற்கும் கூடங்குளம் அணுஉலை அதிகாரிகளுக்கு எந்த உரிமையும், பொறுப்பும் கிடையாது. கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளும், மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் செய்ய வேண்டிய வேலையை உங்களின் அணுஉலை நண்பர்களிடம் கொண்டுபோய் கொடுப்பது என்ன நியாயம்? இதை குமரி மாவட்ட மக்களோ, தமிழ்நாட்டு மக்களோ அனுமதிக்க மாட்டோம்.
ராதாபுரம் கால்வாய்
கடந்த இரண்டு மாதங்களாகவே கன்னியாகுமரி மாவட்ட உபரி நீர் பற்றி நீங்கள் அடிக்கடிப் பேசி வருகிறீர்கள் என்று குமரி மாவட்ட விவசாயச் சங்கங்களின் தலைவர்கள் விசனப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். குமரி மாவட்டத் தண்ணீரை கூடங்குளம் அணுஉலைத் திட்டத்திற்கு தாரைவார்க்கப் பார்க்கிறீர்களோ என்கிற சந்தேகம் பலருடைய மனங்களில் எழுகிறது.
நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைகளில் முடிவெடுக்க தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் ஒருவர் மலை போல இருக்கும்போது, கூடங்குளம் அதிகாரிகளிடம் மனு கொடுப்பதும், மன்றாடுவதும் வேடிக்கையாக மட்டுமல்ல, வேதனையாகவும் இருக்கிறது’என்று விரிவாக எழுதியுள்ளார்.
–