வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டிக் கொள்வது சசிகலாவின் வழக்கமல்ல. எதையும் நிதானித்து பேசும் அவர் இப்போது ஈபிஎஸ்சையெல்லாம் எதிர்க்க வேண்டியிருக்கிறதே என்ற எரிச்சலில் என்னென்னவோ பேசி பலரது வாயிலும் விழும் நிலைக்கு வந்துவிட்டார்.
எம்ஜிஆரே என்னிடம் ஆலோசனை கேட்டார் என்று அவர் சொன்னது தான் தாமதம், சிலர் சிரிக்க, பலர் விமர்சிக்க தொடங்கிவிட்டனர். எம்ஜிஆருடன் நெருக்கமாக இருந்த வலம்புரி ஜான் நூலிலிருந்து சில பக்கங்களை எடுத்துக்காட்டுவோர் அவர் எம்ஜிஆருக்கு ஆலோசனை சொல்லவில்லை. அவரது உத்தரவின் பேரில் ஜெயலலிதாவை ஒற்றறிந்து சொன்னார் என்கின்றனர்.

எம்ஜிஆரால் பாராட்டப்பட்ட சந்திரலேகா ஐஏஎஸ் பேட்டியை சுட்டிக்காட்டுவோர், சசிகலா ஆலோசகராகவும் இல்லை, ஒற்றராகவும் இல்லை, ஜெயலலிதாவையும் எம்ஜிஆரையும் சேர்த்து வைக்கும் தூதாக இருந்துள்ளார் என்கின்றனர். அதிமுகவை வழிநடத்த லாயக்கானவர் என்று பல தொண்டர்கள் எண்ணிக்கொண்டிருக்கும் நிலையில் சீமான் போல் அதிகமாக பேசி சசிகலா மாட்டிக்கொள்வது சொந்த காசில் சூனியம் வைப்பது போலத்தான்.