கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தர்ஷன் (22). இவர் தனது தந்தையுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் கல்லூரியில் படித்த பொழுது கோவை காந்திமா நகர் பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்த குருசாமி என்பவரின் மகள் பார்கவி (22 ).என்பவருடன் பழகி வந்தார். கல்லூரி படிப்பு முடிந்த பிறகு பார்கவி உடன் தொடர்பு இல்லாமல் இருந்து வந்த தர்ஷனுக்கு மீண்டும் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் மூலம் பார்கவி மீண்டும் நட்பை தொடர்ந்தார். இதையடுத்து நட்பாக இருவரும் பேசி வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் தனிமையில் சந்திக்கலாம் என திட்டமிட்டனர். ஊரடங்கு காரணமாக கோவை நகரில் எங்கும் தங்க முடியாது என்பதால் ஆனைகட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட் ஒன்றில் அறை எடுத்து தங்கலாம் என முடிவு செய்தனர். கடந்த 4ஆம் தேதி இருவரும் அந்த தனியார் ரிசார்ட்டுக்கு சென்று தங்கினர்.
இருவரும் உல்லாசமாக இருந்துவிட்டு பின்னர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த அறைக்கு வந்த இரண்டு பேர் நீங்கள் இருவரும் உல்லாசமாக இருந்த போட்டோ வீடியோக்களை எடுத்து வைத்துள்ளோம். அவற்றை வெளியிடாமல் இருக்க பணம் கொடுக்க வேண்டும் என்று கூறி மிரட்டி உள்ளனர். இதில் பயந்துபோன தர்ஷன் 23 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். இதையடுத்து பயந்து போன தர்ஷன் என்ன செய்வது என்று புரியாமல் தவித்துள்ளார் .
இதற்கிடையே பார்கவியின் நடவடிக்கைகளில் சந்தேகம் வந்தது., அதுபற்றி ஆராய்ந்தபோது பார்கவியின் நண்பர்கள்தான் தங்கியிருந்த அறைக்கு வந்து மிரட்டியவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் தடாகம் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார் .புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் பார்கவியை கைது செய்தனர். பின்னர் அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் செல்வபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த ஹபீப் அலி (24) மற்றும் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த அப்துல் கலாம் (24) ஆகிய இருவரும் வந்து பணம் பறித்தது தெரியவந்தது. இதில் ஹபீப் அலியும் பார்கவியும் காதலித்து வந்தது தெரிய வந்தது.பணம் இல்லாத காரணத்தினால் இப்படி நாடகமாடி ரியல் எஸ்டேட் அதிபரிடம் இருந்து ஏராளமான பணத்தை பறிக்கலாம் என்ற நோக்கத்தில் பார்கவியும் அவரது காதலன் மற்றும் நண்பரும் இணைந்து இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் தடாகம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.