கோவையை அடுத்த தடாகம் சோமனூர் பகுதியைச் சேர்ந்த சேர்ந்தவர் செந்தில்குமார் (50). கூலித் தொழிலாளியான இவர் இன்று காலை அதே பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப் அருகே காயங்களுடன் கிடந்தார். இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் தடாகம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணமாக கிடந்த செந்தில்குமார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்த செந்தில்குமாரின் உடலில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததால் இது கொலையாக இருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு வாலிபர் செந்தில்குமாரை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் ஹோட்டலில் பணிபுரியும் சின்னதுரை (30 )என்ற வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சின்னதுரை, மதுபோதையில் செந்தில் குமாருக்கும் தனக்கும் தகராறு ஏற்பட்டது என்றும் தகராறு முற்றியதால் செந்தில்குமாரை கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சின்ன துரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.