திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட அருளாளர் ஸ்டேன் பழங்குடியினரின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். 2017 ம் ஆண்டு பீமா கோரேகான் வன்முறை வழக்கை தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. விசாரித்து வந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு என்ஐஏ அதிகாரிகள் ஸ்டான் ஸ்வாமியைக் கைது செய்தனர்.
பார்க்கின்சன்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு சிறையில் சரியான சிகிச்சை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று அவரது தரப்பில் தொடர்ந்து குற்றஞ்சாட்டுப்பட்டு வந்தது.
உரிய மருத்துவச் சிகிச்சை வழங்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டதையடுத்து கடந்த மே 29 ஆம் தேதியன்று மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக்கருவி சிகிச்சை பலளனிக்காமல் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது மறைவிற்கு பலரும் சம்பிரதாயமான இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கேரள முதல்வரும் பழுத்த கம்யூனிஸ்டுமான பினராயி விஜயன் ’மிகவும் உருக்கமான இரங்கலை’ தெரிவித்துள்ளார். ஆட்சியில் இருந்தாலும், தொடக்கத்தில் இருந்து இவரால் ஸ்டேன் விடுதலைக்கு குரல் தான் கொடுக்க முடிந்தது.

’ஸ்டேன் சாமியின் மறைவு செய்தி கேட்டு துயருற்றேன். நாட்டிலேயே மிகவும் அதிகமாக நலிந்த மக்களுக்காக வாழ்நாள் முழுக்க போராடிய நபர் இப்படி கஸ்டடியில் மரணம் அடைவது ஒருபோதும் நியாயப்படுத்த முடியாத ஒன்று’ என்பது இவரது அனும்தாப செய்தி, எதேச்சதிகார அரசு ஒன்று, மக்கள் புரட்சி ஏற்பட்டால் அன்றி, தனது செயலை நியாயப்படுத்த மட்டுமல்ல, இலட்சியப்படுத்தவும் தேவையில்லை என்பது இவர் அறியாததல்ல. வாக்குக்காக கையேந்தும் நிலையில் உள்ள இவர்கள் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லவும் போவதில்லை. அதேவேளை, தங்கள் நிலையை நியாயப்படுத்த இவர்களிடம் நிறைய காரணங்கள் இருக்கின்றன.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், இது உபா சட்டத்தின் கொடூரம் எனவும், அரசு பதிலளிக்க வேண்டிய மரணம் எனவும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அரசு பதிலளிக்கப் போவதில்லை என்பதும், ’பதில் சொல்’ என்று அரசை இவர்கள் உலுக்கப் போவதில்லை என்பதும் உழுத்துப் போகாத உண்மை.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் டிவிட்டரில் ’பழங்குடியின மக்களின் உரிமைப் போராளியும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி அவர்கள் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். ஆழ்ந்த இரங்கல்’ என்று ஏதோ அவர் சாதாரணம் மரணம் அடைந்தது போல் வியந்து, பின்னர், ’அடித்தட்டு மக்களுக்காகப் போராடிய அவருக்கு நேர்ந்த துயரம் இனி எவருக்கும் நிகழக் கூடாது’ என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

ஊஃபா போன்ற கருப்பு சட்டங்கள் இயற்றப்பட நாடாளுமன்றத்தில் மெளன சாட்சிகளாக இருக்கும் இவர் போன்ற அரசியல் கட்சியாளர்களால் இனி எவருக்கும் இது நிகழாமல் தடுக்க முடியாது என்பது அவர்களின் மனச்சாட்சி அறிந்த ரகசியம். ஸ்டேனைப்போல, இன்னும் சிறையில் உள்ள மிகவும் வயது முதிர்ந்த, நோய்ப்பட்ட, மக்களுக்காக பேசியதை தவிர வேறெந்த குற்றமும் செய்யாத பேராசிரியர்கள், கவிஞர்கள் விடுதலைக்காவது இவர் ஏதாவது செய்வாரா? போதையில் செய்யும் சத்தியமும், துக்க வீட்டில் கூறும் உறுதிமொழியும் அந்தந்த நிமிட ஆறுதலே தவிர, நீடித்து நிலைக்காது.
சரி, அருளாளர் ஸ்டேன் மீது பழி விழுந்த கதையை பார்ப்போம்.
கும்பகோணம் மறை மாவட்டம் விரகளூர் கிராமத்தைச் சார்ந்தவர் ஸ்டனிஸ்லாஸ் லூர்து சாமி. இவர் பிலிப்பைன்ஸின் மணிலா பல்கலை கழகத்தில் படித்தவர். .இயேசு சபையில் துறவறம் பூண்டு 10 ஆண்டுகள் பெங்களூரில் இந்திய சமூக நிறுவனத்தில் பணியாற்றினார்.
கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி நகரில் ஆதிவாசிகள் மத்தியில் பணிபுரிந்து வந்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் நான்கில் ஒரு பங்கு பேர் ஆதிவாசிகள். இங்கு யுரேனியம், மைகா,பாக்சைட், தங்கம், வெள்ளி, கிராபைட், நிலக்கரி போன்ற கனிம வளங்கள் மிகுதி. .ஆதிவாசிகளை அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடத்தில் சுரங்கங்களை, அணைகளை அரசு நிறுவியதை தட்டிக்கேட்டவர்களை அரசு கடுமையாக தண்டிக்கிறது.

ஸ்டேன் , இதுகுறித்து ஊடகங்களில் செய்தி அளித்தார். சிறைப்பட்ட ஆதிவாசிகள் விடுதலைக்கு உதவினார். 3000 ஆதிவாசிகள் விசாரணை கைதிகளாக பல்வேறு சிறைச்சாலைகளில் இருப்பதை எதிர்த்து ராஞ்சி உயர்நீதி மன்றத்தில், பொது நல வழக்கு தொடர்ந்தார். இதனை ஒட்டி நீதிமன்ற குழு அமைக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, நிலத்தை ஆர்ஜிதம் செய்வதற்கு கிராம சபையில் ஒப்புதல் வேண்டும்; நிலத்தைச் சேர்ந்த வர்களுக்கு உரிய இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியில் இயற்றப்பட்ட பஞ்சாயத்து சட்டம் 1996 மக்களுக்கு ஆதரவாக இருப்பதாக அவர் பிரசாரம் செய்ததும் அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

2017 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் பீமா கோரேகான் நகரில் 200 ஆண்டுகளுக்கு முன்பாக பிரிட்டிஷ் படையில் இருந்த தலித்துகள்( மஹர் ) பெற்ற வெற்றியின் நினைவாக பேரணி நடந்தது. இந்த பேரணியில் ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் இறந்தார்.மாநிலம் முழுவதும் கலவரம் ஏற்பட்டது. இதைக் காரணமாக வைத்து அப்போதிருந்த மகாராஷ்டிரா அரசு ‘அர்பன் நக்சல்கள்’ என்று முத்திரை குத்தி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கவிஞர், பேராசிரியர், எழுத்தாளர்,வழக்கறிஞர்,மனித உரிமை செயற்பாட்டாளர் பலர் மீது வழக்குப் பதிவு செய்தது.
ஆந்திர கவிஞரான வரவர ராவ், தில்லி பல்கலைக்கழக பேராசிரியரான சுதா பரத்வாஜ், ஆனந்த் டெல்டும்டே, அருண் பெரைரா,பெர்னார்ட் கொன்சால்வேஸ்,கௌதம் நவ்வால்கா,வழக்கறிஞர் சுரேந்திரா,பேராசிரியர் ஹனிபாபு,கபீர் கல மன்ஞ்சின் மூன்று உறுப்பினர்கள் உள்ளிட்ட 15 பேரை சிறையில் அடைத்திருக்கிறது.

இந்த வழக்கில் சந்தேகிப்பவர் பட்டியலில் வைத்திருந்த ஸ்டேனையும் கைது செய்தது. இதில் வேடிக்கை என்னெவெறால், அவர் ஒருமுறை கூட அவர் அந்த ஊருக்குச் சென்றதில்லை. இந்த உண்மை அடிப்படையில் 2020 ஜனவரியில் புதிதாகப் பொறுப்பேற்ற சிவசேனா- காங்கிரஸ் அரசு பீமா கோரேகான் வழக்கை மறு விசாரணை செய்யப்போவதாக அறிவித்தது. உடனடியாக மத்திய அரசின் கீழ் இருக்கும் தேசிய புலனாய்வு நிறுவனம் மாநில அரசையும் கலந்தாலோசிக்காமல், நேரடியாக இந்த வழக்கை தன்வசம் எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கின் கீழ் ஸ்டேனை , ஜூலை மாதத்தில், 15 மணி நேரத்திற்கு மேல் விசாரணை செய்தார்கள். இரண்டு முறை அவர் தங்கியிருந்த அறை சோதனை செய்யப்பட்டது. அவரது அறையில் நாற்காலிகள், புத்தகங்கள் நிறைந்த அலமாரியைத் தவிர வேறு பொருள் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அக்டோபர் மாதம் எட்டாம் தேதி விசாரணைக்கு மும்பை வருமாறு தேசிய புலனாய்வு முகமை அழைத்தது. ஆனால் தனக்கு பார்கின்சன்நோய் இருப்பதையும், கொரோனா நோய் நெருக்கடியையும் குறிப்பிட்டு, முதிர் வயதான தன்னால் மும்பைக்கு வர இயலாது என்று தெரிவித்தார். தேவைப்பட்டால் காணொளி மூலம் விசாரணைக்கு உட்படுவதாக கூறினார். ஆனாலும், ,அவரை அக்டோபர் மாதம் எட்டாம் தேதி ராஞ்சியில் கைது செய்து, விமானத்தில் அழைத்துச் சென்று மும்பையில் நீதிமன்ற காவலில் வைத்தனர்.
அவரது கைதை எதிர்த்து இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் சமூக நல அமைப்புகளும்,தொண்டு நிறுவனங்களும்,சிறுபான்மையின மக்களும் போராடினர். இப்போது போலி அனுதாபம் தெரிவிக்கும் எந்தக்கட்சியும் பேரளவில் கூட போராட்டம் நடத்தவில்லை. ஆனால், சிலர் அறிக்கைகளில் அனல் பறந்தது.

இழவுக்கு ஒடுங்கி ஒப்பாரி வைப்பவர்களால் உரிமையை உரத்து முழங்க முடியாது. மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் கருப்பு சட்டங்களை அகற்ற போராடாமல், அருளாளர் ஸ்டேன் போன்றவர்கள் வீணாக தண்டிக்கப்படுவதை தடுக்க முடியாது.
என்ஐஏ போன்ற அமைப்புகள் உருவாக்கப்படுவதை தடுக்க வாய்ப்பிருந்தும் திமுக நாடாளுமன்றத்தில் நைச்சியமாக நடந்துகொண்டது. இப்போது ஸ்டேனுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறது. கம்யூனிஸ்ட் இயக்கங்கள் உரிமைக்காக போராடுவதை விட்டுவிட்டு, நாடாளுமன்ற, சட்டமன்ற பதவிகளுக்கு போராடுவதில் அதிகக் கவனம் செலுத்துவதையும் மறக்க முடியாது. காங்கிரஸ், பாஜக கட்சிகள் மக்கள் உரிமையை பறிப்பதில்ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. ஊஃபா, தடா, பொடா கருப்பு சட்டங்களுக்கு எதிராக போராடாத சமூகத்தில் ஜனநாயகம் தழைக்க முடியாது. சாதி, மத பிணக்குகளை விட்டுவிட்டு, தங்கள் உரிமை, நலன்களைப்பற்றி சிந்திக்காத வரை இவர்களுடன் சேர்ந்து மக்களும் அழுவது ஒன்றே இப்போதைக்கு முடியும்.