தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தற்போது படிப்படியாக குறைந்து வருவதையொட்டி, தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்ததின் காரணமாக, கடந்த 80 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்கள் பல்வேறு கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு இன்று முதல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்,
இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக கருதக்கூடிய அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவில், திருமோகூர் காளமேகப்பெருமாள் திருக்கோவில், ஒத்தக்கடை நரசிங்கப்பெருமாள் திருக்கோயில்களில் நேற்று கிருமி நாசினி தெளித்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது,
இதனைத் தொடர்ந்து இத்திருத்தலங்களில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, மூலவர் மற்றும் உற்சவர், பரிகார மூர்த்தி ஆகியோர்களுக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்ட நிலையில், பக்தர்கள் முககவசம் அணிந்து, கிருமி நாசினி, மற்றும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உரிய சமூக இடைவெளியுடன் தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்,
மேலும் அழகர்கோவிலில் உள்ள பழமுதிர்சோலை முருகன் கோவில், ராக்காயி அம்மன் கோவில், பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், மலை மீது உள்ள நூபுரகங்கை தீர்த்தம், அனுமர் தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்களில் தீர்த்தமாடவும், திருக்கோவில் வளாகத்தில் கிடா மற்றும் பொங்கல் வைத்து வழிபடவோ அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது,
மேலும் 80 நாட்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டாலும், கொரோனா அச்சம் காரணமாக திருக்கோவில்களில் பக்தர்களின் வருகை குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது