கொரோனா ஊரடங்கு காரணமாக கோவையில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படாமல் உள்ளன . தமிழகத்தில் மற்ற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா,கர்நாடகா வில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள். போலீஸாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு மது விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில்
கோவை, சாய்பாபா காலனி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் வீட்டில் ஒருவா் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மத்திய சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆணையா் பிரேமானந்த் மேற்பாா்வையில் போலீஸாா் கே.கே.நகா் பகுதியில் சோதனை நடத்தினா்.
அப்போது, அந்தப் பகுதியில் ஒருவா் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், பிடிபட்டவா் மோகன் நாயா் (47) என்பதும், அந்தப் பகுதியில் சிறிய அளவில் ஜவுளிக் கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது.
ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் மதுக்கடைகள் இல்லாததாலும், தொழிலும் இல்லாமல் வீட்டிலே முடங்கி கிடந்ததாலும் யூ டியூப்பில் சாராயம் காய்ச்சும் முறையை பார்த்துள்ளார். முதலில் அவர் குடிப்பதற்காக வீட்டில் சாராயம் காய்ச்சி உள்ளாா். சாராயம் நன்றாக இருக்கவே, அதனை தெரிந்த நபா்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.மேலும் அவரது வீட்டை சோதனையிட்ட போலீஸாா், அவரிடம் இருந்து சாராயம் காய்ச்ச பயன்படுத்திய குக்கர் உள்ளிட்ட பொருட்களையும் 2 லிட்டா் கள்ளச் சாராயத்தைப் பறிமுதல் செய்தனர்.