நெல்லை கைதி உடலை வாங்க மறுத்து ஆதார் அட்டை ஒப்படைக்க வந்த உறவினர்கள் கைது

0
925

நெல்லை மூன்றடைப்பு அருகே உள்ள வாகை குளத்தைச் சேர்ந்தவர் முத்து மனோ. இவர் ஒரு வழக்கு தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.அங்கிருந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பாளை மத்திய சிறைக்கு அழைத்து வந்தனர். அங்கிருந்த கைதிகள் அவரை தாக்கியதால் படுகாயமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இறந்தார்.

இந்த சம்பவத்திற்கு சிறையில் உள்ள அதிகாரிகளும் கைதிகளுக்கு உடந்தையாக இருந்ததாக முத்து மனோவின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினார். அந்த அதிகாரிகளையும் வழக்கில் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.அதுவரை முத்து மனோவின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி தொடர்ந்து போராடி வந்தனர்.

இதையடுத்து சிறையில் பொறுப்பில் இருந்த அலுவலர்கள் 7 பேரை அரசு சஸ்பெண்ட் செய்தது. மேலும், சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ண குமாரை இடமாறுதல் செய்தது.ஆனால் கிருஷ்ணகுமார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பதில் முத்து மனோவின் உறவினர்கள் உறுதியாக இருந்தனர்.

இதற்கிடையில் முத்து மனோவின் தந்தை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.அதை விசாரித்த நீதிபதிகள் உடலை வாங்கிக் கொள்ளுமாறு கூறினர்.அதன் பின்பும் உடலை வாங்காமல் தொடர்ந்து போராடி வந்தனர். இந்நிலையில் மேல்முறையீடு செய்வதற்குள் உடலை வாங்கிக் கொள்ளுமாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதற்கு நாளை வரை (29ஆம் தேதி )கெடு விதித்தனர்.

ஆனாலும் உடலை வாங்குவதில்லை என்றும், உறவினர்கள், ஊர்க்காரர்கள் அனைவரும் ஆதார் கார்டுகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க போவதென்றும் அறிவித்தனர்.அதனால் மூன்றடைப்பு முதல் நெல்லை கலெக்டர் அலுவலகம் வரை ஐந்து மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதற்கிடையே முத்து மனோவின் ஊரான வாகை குளத்திலிருந்து ஆதார் அட்டைகளை ஒப்படைக்க வந்த நூற்றுக்கு மேற்பட்டோரை மூன்றடைப்பு அருகே எஸ்பி மணிவண்ணன் தலைமையிலான போலீசார் மடக்கி கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here