கோவையில் அடுத்தடுத்து ஏடிஎம் இயந்திரங்கள் உடைப்பு

0
336


கோவை செல்வபுரம் ராமமூர்த்தி ரோட்டில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்துக்குள் இன்று அதிகாலை 2 மணி அளவில் நுழைந்த 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் கல்லால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றார்.

இந்த தகவல் ஐதராபாத்தில் உள்ள வங்கி அலுவலகத்துக்கு கிடைத்தது. வங்கி அதிகாரிகள் உடனடியாக இதுகுறித்து செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் அந்த மர்ம நபர் அங்கு இருந்து தப்பி சென்று விட்டார்.


பின்னர் போலீசார் ஏ.டி.எம். எந்திரத்தை ஆய்வு செய்தபோது ஏடிஎம் எந்திரத்தில் கீழ்ப்பகுதியை அந்த மர்ம நபர் கல்லால் தாக்கி உடைக்க முயன்றதும் அது திறக்காததால் ஆத்திரமடைந்த அவர் ஏடிஎம் எந்திரத்தின் மானிட்டரை கல்லால் தாக்கி உடைத்து விட்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது.

இதனை அடுத்து போலீசார் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த மர்ம நபர் கல்லால் தாக்கி ஏடிஎம் எந்திரத்தை உடைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதனை வைத்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் செல்வபுரம் பகுதியில் நள்ளிரவு பரபரப்பை ஏற்படுத்தியது.


இதே போலகோவை காளப்பட்டியை அடுத்த வெள்ளானைப்பட்டி ஊராட்சியில் இருந்து செரயாம்பாளையம் செல்லும் சாலையில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.
இங்கு நேற்று அப்பகுதியில் உள்ள வர்கள் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவும் உடைக்கப்பட்டு நொறுங்கி கிடந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.அவர்கள், ஏ.டி.எம். மையத்தில் பதிவான தடயங்களை ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


இதில், நேற்று முன்தினம் இரவு 12 மணியில் இருந்து 1 மணிக்குள் மர்ம நபர்கள் ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்து எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும்
அவர்களால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் அப்படி விட்டு விட்டு தப்பி சென்றதும் தெரிய வந்தது.


இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here